தர்மபுரியிலிருந்து கோவை நோக்கி சென்ற ஒரு லாரியில் மறைத்து வைத்திருந்த 2.5 டன் எடையுள்ள வெடி பொருட்கள் மற்றும் எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தைக் காவல்துறை முறையாக விசாரித்து உண்மையை வெளிக் கொண்டு வரவேண்டும் எனத் தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரியிலிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரியில் மறைத்து வைத்திருந்த மரப்பெட்டிகளில் 2.5 டன் எடையுள்ள வெடி பொருட்கள் மற்றும் எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்களை மீட்டுள்ளது சேலம் காவல்துறை.
இந்த வாகனத்தைச் செலுத்திய ஓட்டுநர் இளையராஜா என்பவரை கைது செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சட்ட விரோதமாக இந்தப் பொருட்கள் எடுத்து செல்லப்பட்டதாலேயே ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
துரிதமாக நடவடிக்கை எடுத்த சேலம் காவல்துறையினரை பாராட்ட நாம் கடமைப்பட்டிருக்கும் அதே வேளையில், இவ்வளவு வெடி பொருட்களைத் தைரியமாகத் தமிழகத்தில் கடத்தும் நிலை வந்துள்ளது கவலைக்குரியது.
குறிப்பாக, கடந்த வருடம், அக்டோபர் 23 -ம் தேதியன்று கோவையில் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அருகே குண்டு வெடித்து ஜமிசா முபீன் என்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதி உயிரிழந்தது இன்றளவும் கோவை நகரை பதட்டத்தில் வைத்துள்ளது. இந்த நிலையில், அதே கோவைக்கு இந்த வாகனம் சென்று கொண்டிருந்தது அதிர்ச்சியளிக்கிறது.
காலம் தாழ்த்தாமல் , காவல்துறையினர் இந்த வெடிபொருட்களைச் சட்ட விரோதமாக எடுத்து செல்ல முயன்ற கும்பலை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதி பூங்காவான என அழைக்கப்படும் தமிழகத்தில் சட்ட விரோத வெடிபொருட்கள் வலம் வருவது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, இந்த வழக்கை காவல்துறையினர் முறையாக விசாரித்து உண்மையை வெளிக் கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.