விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஷேன் டவ்ரிச் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மேற்கிந்திய அணி தன் சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தொடருக்கான மேற்கிந்திய அணியில் இடம்பெற்றிருந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ஷேன் டவ்ரிச் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 32 வயதான ஷேன் டவ்ரிச் 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
இவர் மொத்தம் 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடைசியாக 2020ஆம் ஆண்டு டிசம்பரில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடினார். இதுவரை 1 ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். நாளை மறுதினம் தொடங்கவுள்ள இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம்பெற்றிருந்த நிலையில் திடீரென ஓய்வு முடிவை அவர் அறிவித்துள்ளார்.