திருவண்ணாமலையில், மகா தீபத் திருவிழா, சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவடைந்தது. இதை அடுத்து, மகா தீபம் ஏற்ற நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு, வருகிற டிசம்பர் 27-ஆம் தேதி முதல், மகா தீப மை பிரசாதம் வழங்கப்பட உள்ளது.
உலக பிரசித்தி பெற்ற பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாகவும் உள்ள திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்தது. விழாவில் தினமும் காலை மற்றும் இரவில், சுவாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடந்தது.
கடந்த 26-ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, மாலை 6 மணியளவில் 2 ஆயிரத்து 668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில், 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.
தொடர்ந்து கடந்த 3 நாட்களாக தெப்பம் உற்சவம் நடந்து வந்த நிலையில், நிறைவு விழாவான நேற்று, சண்டிகேஸ்வரர் உற்சவம் நடந்தது. தொடர்ந்து, ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
அண்ணாமலையார் மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம், 11 நாட்கள் தொடர்ந்து எரியும். பின்னர் மகா தீப கொப்பரையிலிருந்து தீப மை பிரசாதம் சேகரிக்கப்பட்டு, வரும் டிசம்பர் 27-ஆம் தேதி ஆருத்ரா தரிசனத்தன்று, சிவகாமி சமேத நடராஜருக்கு முதலில் சாத்தப்பட்டு, பின் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது.