ரூ.55 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தவர்கள் மீது டெல்லி சுங்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
ரகசிய தகவலின் அடிப்படையில், தில்லி சுங்க தடுப்பு ஆணையரக அதிகாரிகள் நேற்று சோதனை செய்ததில் சுமார் ரூ.55.23 லட்சம் மதிப்புள்ள 5,48,800 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளைக் கைப்பற்றினர்.
பிளாட்டினம் செவன், டேவிடாஃப், டன்ஹில் மற்றும் மாண்ட் உள்ளிட்ட பல்வேறு பிராண்டுகளின் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளில் கட்டாய சுகாதார எச்சரிக்கை இடம்பெறவில்லை.
இந்த சிகரெட்டுகள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டன, சுங்க வரி செலுத்தப்படவில்லை. சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலை பொருட்கள் திருத்த விதிகள், 2022 ஐ மீறி உள்நாட்டு சந்தையில் இந்த சிகரெட்டுகள் விநியோகிக்கப்பட்டன என்று சந்தேகிக்கப்படுகிறது.
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர், சுங்கச் சட்டம், 1962-ன் பிரிவு 104-ன் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.