பாகிஸ்தான், வங்கதேச எல்லைகளில் வேலி அமைக்கும் பணி அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
எல்லை பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டதன் 59ம் ஆண்டு விழா, ஜார்க்கண்டின் ஹசாரிபாக்கில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று வீரர்களின் மத்தியில் பேசினார்.
அப்போது, பிரதமர் மோடி தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு பாகிஸ்தான் மற்றும் வங்கதேச எல்லைகளில், 560 கி.மீ., தூரத்துக்கு வேலி அமைக்கப்பட்டுள்ளதாகவும், 60 கி.மீ., தூரத்தில் மட்டுமே பணிகள் தொடர்வதாகவும் அவர் கூறினார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் எல்லைகளும் முழுமையாக அடைக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஒரு நாட்டின் எல்லை பாதுகாப்பாக இல்லாவிட்டால் அந்த நாட்டில் வளர்ச்சியும் செழிப்பும் இருக்காது என்றும் அவர் கூறினார்.
உங்களின் தியாகம் அளப்பரியது. எல்லைகளில் போடப்பட்டுள்ள வேலி மட்டும் நாட்டை பாதுகாக்காது. வீரர்களின் துணிச்சல் தான் அதை செயல்படுத்துகிறது என்றும், நாட்டின் வளர்ச்சிக்குப் பின்னால் வீரர்களின் தியாகம் உள்ளதாகவும் அமித் ஷா குறிப்பிட்டார்.