மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னையில் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், தேவையின்றி வெளியே வர வேண்டாம் என சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மிக்ஜாம் புயல் கரையைக் கடக்க உள்ளதால், பொது மக்கள், வாகன ஓட்டிகள் தேவையின்றி வெளியே வர வேண்டாம். புயல் கரையைக் கடந்து விட்டது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வீட்டிலேயே இருங்கள். வெளியே பயணிக்க வேண்டியிருந்தால், பொது போக்குவரத்து அல்லது நம்பகமான வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும்.
வாகனங்களை மெதுவாகவும், கவனமாகவும் ஓட்ட வேண்டும். பிரேக்குகளை சரிபார்ப்பது முக்கியம். தண்ணீர் தேங்கிய பகுதிகளில் வாகனங்களை ஓட்ட வேண்டாம். இடி மின்னலின் போது மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதுடன், மின்கம்பம், கம்பி, உலோக பொருட்கள், மின்னலை ஈர்க்கக்கூடிய கட்டமைப்புகளில் இருந்து விலகியிருப்பது அவசியம்.
கீழே விழுந்து கிடக்கும் மின்கம்பிகளைத் தொடுவதோ அல்லது அதன் அருகிலோ செல்வதோ கூடாது. அவசர உதவி தேவைப்பட்டால் 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்று கூறப்பட்டுள்ளது.