தமிழ் திரையுலகில் சில்க் ஸ்மிதா என்ற பெயரை உச்சரிக்காத உதடுகளே இருக்க முடியாது. காரணம், அவரது சொக்க வைக்கும் கண்களும், பேசும் உதடுகளும், பூத்துக்குலுங்கும் மலர் போன்ற சிரிப்பும், வசீகர முகமும் யாராலும் மறக்கவே முடியாது.
ஆந்திராவில், ஏலூரு என்ற இடத்தில் சாதாரணக் குடும்பப் பின்னணியில் பிறந்த விஜயலட்சுமிதான், பின்னாநாளில் சில்க் ஸ்மிதா ஆக மாறினார்.
திரையுலகில் ஒப்பனைக் கலைஞராகத் தனது வாழ்க்கையைத் துவங்கியவர், வண்டிச்சக்கரம் என்ற படத்தில், சாரயக்கடையில் வேலை செய்யும் சிலுக்கு என்ற கேரக்டரில் தனது மிக ஆழமாக நடிப்பால் திரைத்துறையையே திடுக்கிட வைத்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழித் திரைப்படங்களில் 450 -க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தினார். இதனால், தென்னிந்திய திரையுலகின் ‘கனவு கன்னியாக வலம் வந்தார். தமிழ் திரையுலகில் அன்று உச்சத்தில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களைக் கிறங்கடித்தார்.
ரஜினி நடித்த மூன்று முகம், கமல் நடித்த சகலகலா வல்லவன், கார்த்தி நடித்த அமரன் போன்ற படங்களில் அழகு தேவதையாக ஜொலித்த சில்க் ஸ்மிதா, நீங்கள் கேட்டவை, மூன்றாம் பிறை, லயனம் படங்களில் தனது குணச்சித்திர நடிப்பால் பெண்கள் உள்ளிட்ட அனைவர் மனதிலும் இடம் பிடித்தார்.
திரைத்துறையில் குறுகிய காலத்தில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் முத்திரை பதித்த சில்க் ஸ்மிதா-வின் வாழ்க்கையை மையப்படுத்தி, தி டர்டி பிக்சர் என்ற பெயரில் இந்தி மொழியில் திரைப்படம் வெளியானது. 2011-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமானது. இதனால், இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகளில், மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றதோடு, வசூலை வாரிக்குவித்தது.
அபார நடனத்திறமை, வசீகரக் கண்கள் என சினிமா காதலர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகை சில்க் ஸ்மிதா-வின் பெயரும், நினைவுகளும் இன்றும் மறையாமல் நெஞ்சில் உலா வருகின்றன என்பது நிஜத்திலும் நிஜம்.