வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக, சென்னை, கடலூர் உள்ளிட்ட 5 துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அந்தமான் அருகே உருவாகி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, கடந்த 1-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும், வலுப்பெற்று, 2-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது. சென்னையில் இருந்து 310 கிலோ மீட்டர் தென்கிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் நிலை கொண்டுள்ளது. தற்போது, 5 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.
மிக்ஜாம் புயல் 5-ஆம் தேதி மாலை நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்றும், கரையைக் கடக்கும் போது சுமார், 90 முதல் 100 கிலோ மீட்டர் வரையிலான, வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த நிலையில், புயல் உருவானதை குறிக்கும் வகையில் சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புயல் காரணமாக, பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.