மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. பெற்றிருக்கும் வெற்றி, பிரதமர் மோடி தலைமைக்கு மக்கள் கொடுத்திருக்கும் ஆதரவு என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியிருக்கிறார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோராம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இவற்றில் மிசோராம் தவி மற்ற மாநிலத் தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
இதில், மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட பா.ஜ.க., ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பறித்திருக்கிறது. 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்தில் 164 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலையில் இருக்கிறது.
199 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் 111 இடங்களிலும், 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் 54 இடங்களிலும் பா.ஜ.க. முன்னிலையில் இருக்கிறது. இதன் மூலம் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதியாகி இருக்கிறது.
இந்த நிலையில், மேற்கண்ட 3 மாநில வெற்றி தொடர்பாகப் பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க.வை மக்கள் ஆதரித்திருக்கிறார்கள். பா.ஜ.க.வின் நேர்மறை அர்ப்பணிப்பு மற்றும் பிரதமர் மோடியின் தலைமைக்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். மக்கள் காங்கிரஸை நிராகரித்து விட்டனர்.
காங்கிரஸ் கட்சி எப்போதும் பொய்யான வாக்குறுதிகளையே அளித்து வருகிறது. இதை கர்நாடகா, இமாச்சலப் பிரதேசத்தில் மக்கள் பார்த்திருக்கிறார்கள். எனவே, காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் போலி வாக்குறுதிகளை புறந்தள்ளி, மோடியின் தலைமையை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அதேசமயம், தெலங்கானா மாநிலத்தைப் பொறுத்தவரை, பி.ஆர்.எஸ். கட்சி ஆட்சியின் முறைகேடுகளால் காங்கிரஸ் பலனடைந்திருக்கிறது. விரைவில் தெலங்கானாவிலும் பா.ஜ.க. வளர்ச்சி அடையும். நாங்கள் ராஜஸ்தானில் குறைந்தது 124 இடங்களை கடப்போம். இதனால், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.
அதேபோல, இது பிரதமர் மோடியின் உத்தரவாதத்தின் வெற்றி என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இது பிரதமர் மோடி அளித்த உத்தரவாதத்தின் வெற்றி. பிரதமர் மோடி சொல்வதைச் செய்கிறார். ஆகவே, ஜாதி, மதத்தை தாண்டி மக்கள் பிரதமர் மோடிக்கு வாக்களித்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.