பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால், உலகின் சில நாடுகள் நிலைகுலைந்துள்ளன. கடந்த அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், கட்டட இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
இதேபோல், நவம்பர் 3-ஆம் தேதி இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானதாக இது குறித்து ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸின் மிண்டோனா அருகே 32 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் உணரப்பட்டது. அப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், அங்குள்ள வீடுகள் குலுங்கின. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் மற்றும் அதன் சக்தியை அடிப்படையாகக் கொண்டு பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த மாத தொடக்கத்தில், தெற்கு பிலிப்பைன்ஸில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தால், 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமானது என்பது குறிப்பிடத்தக்கது.