மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய விருதுகளை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
புதுதில்லியில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 2023-ம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய விருதுகளை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று (03.12.2023) வழங்கினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர்,
மாற்றுத் திறனாளிகளுக்கான இந்த தேசிய விருதுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதற்கான ஒரு பாராட்டத்தக்க முயற்சியாகும் என்றார். தனிப்பட்ட மற்றும் நிறுவன பணிகளை அங்கீகரித்து விருதுகள் வழங்கப்படுவது அனைவரையும் ஊக்குவிக்கிறது என்று கூறினார்.
பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் மாற்றுத்திறனாளிகள், பிற மாற்றுத் திறனாளிகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
உலக மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர் எனவும் அவர்களுக்கு அதிகாரமளித்தல் முக்கியமானது என்று குறிப்பிட்டார். கடந்த சில ஆண்டுகளில், மாற்றுத் திறனாளிகள் மீதான சமூகத்தின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
சரியான வசதிகள், வாய்ப்புகள் மற்றும் அதிகாரமளித்தலுக்கான முயற்சிகளின் காரணமாக, இனி வரும் காலங்களில் அனைத்து மாற்றுத் திறனாளிகளும் சமத்துவத்துடனும் கண்ணியத்துடனும் வாழ்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் ஒவ்வொரு பகுதியும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதிலிருந்து அனைவரும் பாடம் கற்று, தொடக்கத்திலிருந்தே மாற்றுத் திறனாளிகளின் தேவைகளை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
வறுமை ஒழிப்பு, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு, நல்ல கல்வி, பாலின சமத்துவம், சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதிகள் போன்றவற்றுடன் தொடர்புடைய நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவது மாற்றுத் திறனாளிகளின் அதிகாரமளித்தலுக்கு சிறப்பு வலிமையை அளிக்கிறது என்று கூறினார். இந்த இலக்குகளுக்கு இந்தியா அதிக முன்னுரிமை அளித்து, அவற்றை அடைவதை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் மிகச்சிறந்த செயல்திறனை சுட்டிக்காட்டியவர், நமது வீரர்கள் தங்கள் அசைக்க முடியாத வெற்றி மனப்பான்மையால் ஒரு புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளனர் என்றார். அனைத்து வீரர்களின் செயல்திறனிலும் தொடர்ந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாக குறிப்பிட்டார்.