நமது பிரதமர் நரேந்திர மோடி மக்களின் இதயங்களில் இருக்கிறார். இந்த வெற்றியை பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்கிறேன் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கூறியிருக்கிறார்.
மத்தியப் பிரதேசம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்தது. இவற்றில் மிசோராம் தவிர்த்து மீதமுள்ள 4 மாநிலங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.
குறிப்பாக, மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 167 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெற்று 3-ல் 2 பங்கு தொகுதிகளை வசப்படுத்தி ஆட்சியை தக்க வைத்திருக்கிறது. மாநில முதல்வராக மீண்டும் சிவராஜ் சிங் சௌஹான் பதவியேற்கவிருக்கிறார்.
இந்த நிலையில், முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் கூறுகையில், “நமது பிரதமர் நரேந்திர மோடி மக்களின் இதயங்களில் இருக்கிறார். குறிப்பாக, மத்தியப் பிரதேச மாநிலம் அவருக்கு இதயம் போன்றது. பிரதமர் மோடி மீது இம்மாநில மக்களுக்கு அளவிட இயலாத அளவுக்கு நம்பிக்கை இருக்கிறது.
இங்கு நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது மக்களின் இதயங்களைத் தொட்டு விட்டது. இதுதான் தேர்தல் முடிவாக மாறியிருக்கிறது. மேலும், மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி அமைந்தால் இரட்டை ஆற்றலுடன் (டபுள் இன்ஜின்) பா.ஜ.க. ஆட்சி நடக்கும் என்று மக்களிடையே பிரசாரம் மேற்கொண்டது நல்ல பலனை அளித்திருக்கிறது.
மத்தியப் பிரதேசத்தில் ஆட்சிக்கு எதிரான அலை இல்லை. ஆட்சிக்கு ஆதரவான அலைதான் நிலவுகிறது. எங்களுக்கு வாக்களித்து மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பளித்த மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களின் உத்தரவாதங்களை நிறைவேற்றுவோம் என்று அனைவருக்கும் உறுதியளிக்கிறேன்.
இந்த வெற்றியை எங்கள் லாட்லி பெஹ்னாஸ் மற்றும் பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்கிறேன். மத்தியப் பிரதேசத்தை முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம்” என்றார்.