சென்னை மயிலாப்பூரில் புகழ்பெற்ற அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இது நாயன்மார்களால் பாடப்பட்ட ஸ்தலமாகும்.
தமிழ்நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டுப் பயணிகள் அனைவரும், தவறாமல் வந்து பார்த்துச் செல்லும் திருக்கோவில்களில் இதுவும் ஒன்று. ஆக மொத்தம், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
கோடை காலத்தில், வெயில் கொளுத்தி எடுத்ததால், பக்தர்கள் பிரகாரத்தைச் சுற்றும் போது, பாதையில் கடும் சூடு ஏற்படும். இந்தச் சூட்டை தணிக்க வேண்டும் என்பதற்காக, திருக்கோவில் நிர்வாகம் சார்பில் வெள்ளை பெயிண்ட் அடித்துப் பக்தர்களுக்குத் தனிப்பாதை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
வெயில் காலத்தில் குளிர்ச்சியைக் கொடுத்து வந்த இந்த வெள்ளை பாதை, மழை காலத்தில் ஆபத்து பாதையாக மாறிவிட்டது. இதில், தினமும் 10 பக்தர்களாவது வழுக்கி விழுந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நல்ல வேளையாக இதுவரை பெரிய அளவு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் நேர்வதற்குள் திருக்கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.