மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றியை பதிவு செய்திருக்கும் நிலையில், மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் நடந்து முடிந்தது. இவற்றில் மிசோராம் தவிர்த்து மற்ற 4 மாநிலங்களில் பதிவாக வாக்குகளின் எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது.
இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பா.ஜ.க. அமோக வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. தெலங்கானா மாநிலத்திலும் கணிசமாக எண்ணிக்கையில் வெற்றியை பெற்றிருக்கிறது.
இந்த நிலையில், தேர்தல் வெற்றி குறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கத்துடன் மக்கள் முன்னேறி வருகிறார்கள். இன்று நாம் ஒன்றிணைந்து அந்த திசையில் ஒரு வலுவான அடியை எடுத்து வைத்திருக்கிறோம்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் மகத்தான வெற்றியைக் கொடுத்ததற்காக நாங்கள் மக்களுக்கு தலைவணங்குகிறோம். தேர்தல் முடிவுகள் நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியல் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.
பா.ஜ.க. மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். பா.ஜ.க. மீது பாசம், நம்பிக்கை மற்றும் ஆசீர்வாதங்களை பொழிந்ததற்காக தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள் மற்றும் எங்கள் இளம் வாக்காளர்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் நலனுக்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்று உறுதியளிக்கிறேன்.
அதேபோல, கடின உழைப்பாளி கட்சித் தொண்டர்களுக்கு சிறப்பு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் சிறந்த முன்னுதாரணமாக விளங்கியுள்ளீர்கள். பா.ஜ.க.வின் வளர்ச்சி மற்றும் ஏழை நலன் சார்ந்த கொள்கைகளை மக்களிடம் கொண்டு சென்ற விதம் பாராட்டுக்குரியது.
வளர்ந்த இந்தியா என்ற இலக்குடன் நாங்கள் முன்னேறி வருகிறோம். இதை நாம் நிறுத்தவோ, சோர்வடையவோ வேண்டியதில்லை. இந்தியாவை வெற்றிபெறச் செய்ய வேண்டும். இன்று நாம் ஒன்றிணைந்து அந்த திசையில் ஒரு வலுவான அடியை எடுத்து வைத்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.
அதேபோல மற்றொரு பதிவில், “பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்த தெலங்கானா சகோதரர், சகோதரிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக மக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. வரும் காலத்திலும் அதிகரிக்கும். தெலங்கானா உடனான நமது தொடர்பு பிரிக்க முடியாதது. தொடர்ந்து மக்கள் நலனுக்காக உழைப்போம்” என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.