ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் கடைசி டெஸ்ட் போட்டியில் தோல்வியுடன் தான், வழியனுப்பி வைக்கப்படுவார் என்று பாகிஸ்தான் அணியின் ஷாகின் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வீரர்களில் ஒருவர் டேவிட் வார்னர். சமீபத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றதற்கு முக்கிய காரணமாக டேவிட் வார்னர் பார்க்கப்பட்டார்.
தற்போது ஆஸ்திரேலியா அணியின் கவனம் டெஸ்ட் போட்டிகள் பக்கம் திரும்பியுள்ளது. குறிப்பாக டேவிட் வார்னரின் கடைசி டெஸ்ட் தொடர் என்பதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை ஆஸ்திரேலியா அணிக்காக 109 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வார்னர், 3 இரட்டை சதங்கள் உட்பட 25 சதங்கள், 36 அரைசதங்கள் என்று 8,487 ரன்களை எடுத்துள்ளார்.
37 வயதாகும் டேவிட் வார்னர், தனது கடைசி டெஸ்ட் போட்டியை சொந்த மண்ணான சிட்னி மைதானத்தில் விளையாடவுள்ளார். அவரை வெற்றியுடன் வழியனுப்ப வேண்டும் என்று ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது.
இந்த டெஸ்ட் தொடர் டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக சில பயிற்சி போட்டிகளில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. கடந்த முறை பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியது.
இதனால் ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி பதிலடி கொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பவுலர் ஷாகின் அப்ரிடி பேசுகையில், டேவிட் வார்னரின் இரண்டாவது இன்னிங்ஸ்-க்கு வாழ்த்துகள்.
ஆனால் வெற்றியுடன் டேவிட் வார்னர் விடைபெற மாட்டார் என்று நம்புகிறேன். ஏனென்றால் எங்களுக்கு எதிராக கடைசி போட்டியில் களமிறங்குகிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் நாங்கள் முதலிடத்தில் உள்ளோம்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சவாலுக்காக காத்திருக்கிறோம். அதேபோல் கான்பெர்ரா மைதானத்தில் விளையாடிய அனுபவம் இல்லை. ஆனால் பிரதமர் லெவன் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவதன் மூலமாக டெஸ்ட் தொடருக்கு சிறப்பாக தயாராக முடியும் என்று நம்புகிறேன்.
பெர்த் மைதானத்தில் விளையாடவுள்ள முதல் போட்டியில் விளையாட ஆவலாக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
1995ஆம் ஆண்டுக்கு பின் ஆஸ்திரேலியா அணி ஒருமுறை கூட பெர்த் மைதானத்தில் வெற்றிபெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.