ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்காக அவசரகால நிதியிலிருந்து கூடுதலாக 10,000 கோடி ரூபாயை மத்திய நிதியமைச்சகம் விடுவித்திருக்கிறது.
ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்படி, குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
இந்த சூழலில், இத்திட்டத்துக்கான நிதி குறித்து மக்களவையில் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு மத்திய இணையமைச்சா் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில், “வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கான ஊதியம், பொருள் மற்றும் நிா்வாகச் செலவுகள் உள்ளிட்டவற்றுக்காக மாநிலங்களுக்கு கடந்த நவம்பர் 29-ம் தேதி வரை 66,629 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது.
மேலும், மத்திய அரசின் அவசரகால நிதியிலிருந்து கூடுதலாக 10,000 கோடி ரூபாயை மத்திய நிதியமைச்சகம் விடுவித்தது. இன்னும் தேவைப்படும் பட்சத்தில் மத்திய நிதியமைச்சகத்திடமிருந்து கூடுதல் நிதியைக் கோருவோம். மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட வேண்டிய நிதியில் ஊதியங்களுக்காக 2,020 கோடி ரூபாயும், பொருள் செலவுக்காக 4,939 கோடியும் நிலுவையில் உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.
வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்காக 2023-2024 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 60,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.