சென்னை விமான நிலையத்தில் இன்று விமான சேவைகள் வழக்கம்போல் தொடங்கியபோதிலும், போதிய விமானிகள் பணிக்கு வராததாலும், குறைந்த அளவிலேயே பயணிகள் வந்ததாலும், 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது. இதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த 5-ஆம் தேதி தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ள பாபட்லாவிற்கு அருகே மிக்ஜாம் புயல் கரையைக் கடந்தது.
சென்னை விமான நிலைய ஓடுதளத்தில் அதிகளவு மழைநீா் தேங்கியதால், கடந்த 4-ஆம் தேதி இரவு 11 மணி வரை அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவித்தது.
தொடர்ந்து, கனமழை பெய்து கொண்டிருந்ததால், கடந்த 5-ஆம் தேதி காலை 9 மணி வரை விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பலா் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் விமான நிலையத்திலேயே காத்திருந்தனர்.
இந்த நிலையில், விமான நிலைய ஓடுதளத்தில் தேங்கி இருந்த மழைநீர் வடிந்ததைத் தொடர்ந்து, விமான நிலைய வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. இதைத்தொடந்து, கடந்த 5-ஆம் தேதி காலை 9 மணி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கியன. இதனால், காலை முதலே விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்பட்டது. ஏராளமானோர் வரிசையில் நின்று தங்கள் பயணத்தை மேற்கொண்டனர்.
சென்னை விமான நிலையத்தில் வழக்கமான விமான சேவை தொடங்கிய போதிலும், போதிய விமானிகள் பணிக்கு வராததாலும், பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்ததாலும், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 11 விமானங்கள் மற்றும் வரவேண்டிய 11 விமானங்கள் என மொத்தம் 22 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டன.