டிசம்பர் 8 அன்று டேராடூன் செல்லும் பிரதமர் மோடி ‘உத்தராகண்ட் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2023’-ஐ தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 8ஆம் தேதி உத்தராகண்ட் மாநிலம் டேராடூனுக்குப் பயணம் மேற்கொள்கிறார். காலை 10.30 மணியளவில் டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறும் ‘உத்தராகண்ட் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2023’-ஐ தொடங்கிவைத்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
‘உத்தராகண்ட் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2023’ உத்தராகண்டை ஒரு புதிய முதலீட்டு மையமாக மாற்றுவதற்கான ஒரு படியாகும். 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் “அமைதியில் இருந்து செழிப்பிற்கு” என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் துறைப் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இதில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், முன்னணி தொழிலதிபர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.