ஜம்மு காஷ்மீர் இடு ஒதுக்கீடு மற்றும் மறுசீரமைப்பு திருத்த மசோதாக்கள் 2023 நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இன்று மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதன் பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இதில், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தைக் கொண்ட யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகமும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா 2023 மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2023 ஆகிய இரு மசோதாக்கள் இந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, இம்மசோதாக்கள் நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த இரு மசோதாக்களும் நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இம்மசோதாக்களை இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாக்கள் மீதான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடந்து முடிந்ததும், மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், மசோதாக்களுக்கு ஆதரவாக 370 வாக்குகளும், எதிராக 70 வாக்குகளும் பதிவாகின. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இம்மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு, அவரது ஒப்புதல் கிடைத்தவுடன் சட்டமாக்கப்படும். இவற்றில் ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா 2023, ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு சட்டம் 2004-ஐ மாற்றி அமைக்கிறது. இது வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு மற்றும் பட்டியலிடப்பட்ட ஜாதிகள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினருக்கான தொழில்முறை நிறுவனங்களில் சேர்க்கைகளை நிர்வகிக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2023, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019-ஐ திருத்துகிறது. இது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக மறுசீரமைக்க உதவியது. இந்த மசோதா, ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் மொத்த இடங்களின் எண்ணிக்கையை 83-லிருந்து 90-ஆக அதிகரிக்க முன்மொழிகிறது.
இதில் 7 இடங்கள் தாழ்த்தப்பட்ட ஜாதி உறுப்பினர்களுக்கும், 9 இடங்கள் பட்டியல் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்படும். மற்ற அம்சங்களில், காஷ்மீர் புலம்பெயர்ந்த சமூகத்திலிருந்து 2 உறுப்பினர்கள் வரை சட்டமன்றத்திற்கு நியமனம் செய்ய துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும். இவர்களில் ஒரு பெண் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில் இருந்து இடம்பெயர்ந்த நபர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உறுப்பினர் பரிந்துரைக்கப்படலாம்.