சென்னை – மதுரை தேஜஸ் விரைவு இரயில் ரத்தைத் தொடர்ந்து, இன்று மதுரையிலிருந்து புறப்பட வேண்டிய மதுரை – சென்னை தேஜஸ் விரைவு இரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது. இதனால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் அதி கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த 5-ஆம் தேதி தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ள பாபட்லாவிற்கு அருகே மிக்ஜாம் புயல் கரையைக் கடந்தது.
இதனால், சென்னையின் பெரும்பாலான இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதையடுத்து, கடந்த 2 நாட்களாகவே சென்னையிலிருந்து புறப்படும் பல விமானங்கள் மற்றும் இரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில், சென்னை இரயில் நிலையத்திலிருந்து இன்று காலை புறப்பட இருந்த சென்னை – மதுரை தேஜஸ் விரைவு இரயில் (வண்டி எண் – 22671) ரத்து செய்யப்பட்டது. அதேபோல, சென்னை இரயில் நிலையத்திலிருந்து இன்று புறப்பட இருந்த சென்னை – குருவாயூர் விரைவு இரயில் (வண்டி எண் – 16127) ரத்து செய்யப்பட்டது.
மேலும், இன்று இரவு சென்னையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் விரைவு இரயில் மற்றும் செங்கோட்டை வழி செல்லும் கொல்லம் விரைவு இரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
மேலும் சென்னையிலிருந்து இன்று இரவு 08.25 மணிக்குப் புறப்பட வேண்டிய செங்கோட்டை சிலம்பு விரைவு இரயில் (வண்டி எண் – 20681) தாம்பரத்திலிருந்து புறப்படும்படி கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
மேலும், சென்னை – மதுரை தேஜஸ் விரைவு இரயில் ரத்தைத் தொடர்ந்து, இன்று மதுரையிலிருந்து புறப்பட வேண்டிய மதுரை – சென்னை தேஜஸ் விரைவு இரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.