அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவில் பங்கேற்க முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி அவர்களுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டு வருகிறது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டடமும், 57 ஏக்கர் பரப்பளவில் கோயில் வளாகமும் கட்டப்பட உள்ளது.
மேலும் இந்த கோயில் வளாகத்தில் அருங்காட்சியகம், உணவகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த கோயில் கட்டுவதற்காக 1800 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு வருகிறது.
ஒரே சமயத்தில் சுமார் 70 ஆயிரம் பேர் இந்த கோயிலில் வந்து தரிசனம் மேற்கொள்ளும் அளவிற்கு கட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த கோயில் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. வரும் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திறப்பு விழாவில் 160 நாடுகளை சேர்ந்த விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் 25,000 ஹிந்து சாதுக்களும் 136 மடாதிபதிகளும் இந்த திறப்பு விழாவில் பங்கேற்கிறார்கள்.
இந்த திறப்பு விழாவை நேரலை மற்றும் செய்திகளை வழங்குவதற்காக பத்தாயிரம் செய்தியாளர்கள் உலகம் எங்கிலுமிருந்து அயோத்தி கோயிலுக்கு வர உள்ளனர்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் ரோகித் சர்மா, தோனி போன்ற கிரிக்கெட் பிரபலங்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி அப்போது எந்த ஒரு கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்காமல் இருக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த இந்திய அணி வீரர்களும் அயோத்தி கோயிலில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.