காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட ஹன்சியா அத்னன் பாகிஸ்தானில் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த 2015-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பி.எஸ்.எஃப். வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 2 வீரர்கள் வீரமரணமடைந்தனர். மேலும், 13 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் இத்தாக்குதல் சம்பவத்திற்கு ஹன்சியா அத்னன் முக்கியப் பங்கு வகித்தது தெரியவந்திருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு பாம்போர் பகுதியில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவத்திலும் ஹன்சியாவுக்கு தொடர்பு இருக்கிறது.
ஹன்சியா அத்னன், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீதின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் லஷ்கர் தீவிரவாத முகாமிற்குச் சென்ற அத்னன், தீவிரவாத அமைப்புக்கு ஆட்களை தேர்வு செய்தும் வந்திருக்கிறார்.
மேலும், இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கும், தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யவும் பாகிஸ்தான் நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மற்றும் அந்நாட்டு இராணுவம் ஹன்சியாவுக்கு ஆதரவு அளித்து வந்திருக்கிறது. இந்த சூழலில், கராச்சியில் உள்ள தனது வீட்டில் இருந்த அத்னன், மர்ம நபர்களால் சுடப்பட்டிருக்கிறார்.
இச்சம்பவத்தில் அத்னன் உடலில் 4 குண்டுகள் பாய்ந்திருக்கின்றன. இதில் படுகாயமடைந்த தீவிரவாதி அத்னனை பாகிஸ்தான் இராணுவத்தினர் மீட்டு ரகசியமாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அத்னன் இன்று உயிரிழந்து விட்டார்.