காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்த முக்கிய மூளையாக செயல்பட்டவனும், லஷ்கர் – இ- தொய்பா இயக்கத்தின் தலைவனுமான ஹபீஸ் சயீதுவின் மிக நெருங்கிய உறவினரான ஹன்சியா அத்னன் பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டான்.
கடந்த 2015 -ம் ஆண்டு காஷ்மீரில் உதம்பூரில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குல் நடத்தினர். இதில், இரண்டு வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 13-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதல் குறித்து என்ஐஏ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்த முக்கிய மூளையாக செயல்பட்டனும், லஷ்கர் -இ -தொய்பா இயக்கத்தின் தலைவனுமான ஹபீஸ் சயீதுவின் உறவினரான ஹன்சியா அத்னன் செயல்பட்டது தெரிய வந்தது.
மேலும், கடந்த 2016-ம் ஆண்டு பாம்பேர் பகுதியில் சிஆர்எப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திலும், ஹன்சியா அத்னன் ரகசியமாக செயல்பட்டது தெரிய வந்தது.
மேலும், இந்தியாவில் பெரிய அளவில் திடீர் தாக்குதல் நடத்துவதற்கும், தீவிரவாதிகளை ஊடுருவ செய்யவும் ஹன்சியாவுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் அந்நாட்டு ராணுவம் ஆதரவு அளித்து வந்ததுடன், அவர்களுக்கு தேவையான பயிற்சி, பணம் உள்ளிட்டவைகளையும் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், கராச்சியில் உள்ள வீட்டில் ஹன்சியா அத்னன் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனது உடலில் 4 குண்டுகள் பாய்ந்துள்ளன. இதில் படுகாயமடைந்த தீவிரவாதியை ராணுவத்தினர் மிக ரகசியமாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஹன்சியா அத்னன் உயிரிழந்தான்.