மிக்ஜாம் புயல் காற்றின் தாக்கத்தால், வண்டலூர் உயிரியல் பூங்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகளுக்காக இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனைக் காண, தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறி, ஆந்திராவில் கரையைக் கடந்தது. இதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது.
மிக்ஜாம் புயலின் தாக்குதலால் வண்டலூர் பூங்காவில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. மேலும், 5 இடங்களில் பூங்காவின் சுற்றுச்சுவர் சேதம் அடைந்துள்ளன. இதைத்தொடர்ந்து, பூங்காவில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால், இன்று வண்டலூர் பூங்கா மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சேதம் அடைந்த சுற்றுச்சுவர் சீரமைப்பு மற்றும் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இது குறித்து வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மிக்ஜாம் புயல் காற்றின் தாக்கத்தால் பூங்காவில் உள்ள சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. சுமார் 30 மரங்கள் விழுந்து உள்ளன. கனமழையின் போது பூங்கா ஊழியர்களால் சிலர் பணிக்கு வர முடியவில்லை என்ற போதிலும் பூங்காவில் உள்ள ஊழியர்களைப் பயன்படுத்தி விலங்குகளுக்கு உணவளிப்பது மற்றும் விலங்குகளின் அடைப்புகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.
பூங்காவில் எந்த விலங்குகளும் பாதிக்கப்படவில்லை மற்றும் அனைத்து அடைப்புகளும் அப்படியே பாதுகாக்கப்பட்டன. வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையின் இருபுறமும் உள்ள சுவர்களில் 4 இடங்களில் 50 மீட்டர் நீளத்துக்கு சேதமடைந்து உள்ளன.
பூங்காவிற்குள் அருகில் உள்ள ஓட்டேரி ஏரியும் நிரம்பி தண்ணீர் வந்ததால் 30 மீட்டர் நீளத்திற்கு சுற்றுச்சுவர் சேதமடைந்தன. மோட்டார் பம்புகள் மூலம் தேங்கிய தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. முறிந்துவிழுந்த மரங்களை அகற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று கூறப்பட்டுள்ளது.