நிதி மோசடியில் ஈடுபட்ட 100 சீன இணைய தளங்களுக்கு தடைவிதிக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தியர்களை குறிவைத்து முதலீடு தொடர்பான நிதி மோசடிகளில் ஈடுபட்டுவரும் 100-க்கும் மேற்பட்ட சீன இணையதளங்களைத் தடை செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இணையதளங்களை உடனடியாக முடக்குமாறு உள்துறை அமைச்சகம் சார்பில் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு ஆகியவற்றிற்கு பாதகமானவையாக கருதப்படும் சுமார் 250 சீன செயலியைத் தடை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்த TikTok, Xender, Shein, Camscanner உள்ளிட்ட பல சீன மொபைல் செயலிகள் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த மொபைல் செயலிகள் பயனர்களின் முக்கியமான தரவுகளை சேகரிக்கும் அனுமதிகளை கோருவதாகவும், பெறப்பட்ட பயனர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்துவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், PUBG மொபைல் கேம் இந்திய பதிப்பு, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டது. போர் சண்டையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த கேம் இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்தது. ஒரு வருடத்தில் 10 கோடி பயனர்களைக் கடந்தது.