அயோத்தி இராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படும் மூலவர் குழந்தை இராமர் சிலை வருகிற 15-ம் தேதி தேர்வு செய்யப்படவிருப்பதாக கோவில் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள இராமஜென்ம பூமியில், இராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி பாரதப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதன் பிறகு, கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இப்பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி இருக்கிறது. வரும் ஜனவரி மாதம் 22-ம் தேதி இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்விழாவில், பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இக்கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்கான மூலவர் குழந்தை இராமர் சிலையை வடிவமைக்கும் பணியில் சிற்பக் கலைஞர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த வகையில், இச்சிலையை தேர்வு செய்யும் பணி 15-ம் தேதி நடைபெறும் என்று அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறுகையில், “மூலவர் குழந்தை இராமர் சிலை செய்வதற்காக கர்நாடகம், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து இரு பாறைக் கற்கள் கொண்டுவரப்பட்டன.
இப்பாறைகளில் இருந்து 3 சிலைகளை வடிவமைக்கும் பணிகளில் சிற்பக் கலைஞர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இப்பணி 90 சதவீதம் நிறைவடைந்திருக்கிறது. இந்த 3 சிலைகளில் இருந்து பிரதிஷ்டை செய்யப்பட வேண்டிய சிறந்த சிலையை கோவில் அறக்கட்டளை வருகிற 15-ம் தேதி தேர்ந்தெடுக்கும்” என்றார்.
இதனிடையே, அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளுமாறு நாடு முழுவதும் உள்ள முக்கியப் பிரமுகர்களுக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தொழிலதிபர்கள் கௌதம் அதானி, முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், பாடகி ஆஷா போன்ஸ்லே, நடிகை கங்கனா ரனாவத், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி , பிரபல டி.வி. தொடரான இராமாயணாவில் இராமர் மற்றும் சீதாவாக நடித்த அருண் கோவில், தீபிகா சிக்லியா உட்பட 7,000 வி.ஐ.பி.க்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.
இது தவிர, 50 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், நாடு முழுவதும் உள்ள முக்கிய குருமார்கள், மதத் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரபலங்கள், எழுத்தாளர்கள், பல்வேறு துறை நிபுணர்கள், ஓய்வுபெற்ற முக்கிய இராணுவ அதிகாரிகள், விஞ்ஞானிகள், இசையமைப்பாளர்கள், பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருது பெற்றவர்கள் என முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.