குஜராத்தின் பிரபலமான ‘கர்பா’ நடனத்தை, பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகள் பட்டியலில் இணைத்து யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
நவராத்திரி திருவிழா என்றாலே வட இந்தியாவில், ஆன்மீக அன்பர்களுக்கு மட்டுமல்ல இளைஞர்கள், இளம் பெண்கள் என அனைவருக்கும் கொண்டாட்டம்தான். காரணம், நவராத்தியின் போது பெரிய திடல்களில் குழுவாக இணைந்து கலாச்சார ஆடை அணிந்து கர்பா நடனம் ஆடுவார்கள். நவராத்திரி முழுவதும் இந்த நடன கொண்டாட்டங்கள் தொடரும். இந்த கர்பா நடனத்தைப் பார்த்து இரசிப்பதற்காக இந்தியா மட்டுமின்றி உலகின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் குவிகின்றனர்.
வட மாநிலங்களில் பலவற்றில் கர்பா நடனம் ஆடப்பட்டாலும், குஜராத் மாநிலத்தில் கர்பா நடனம் புகழ் பெற்றது. இந்த நடனத்திற்கு சர்வதேச அங்கீகாரம் வழங்கக்கோரி யுனெஸ்கோவுக்கு மத்திய அரசு பரிந்துரைத்தது.
இந்த நிலையில், பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளைப் பாதுகாக்கும் யுனெஸ்கோவின் சர்வதேச குழுவின் மாநாடு, தென் அமெரிக்க நாடான போட்ஸ்வானாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி குஜராத்தின் பாரம்பரியமான ‘கர்பா’ நடனத்தைக் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இணைத்து யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
குஜராத்தின் கர்பா நடனத்திற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்ததற்காக, பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, “கர்பா என்பது வாழ்க்கை, ஒற்றுமை மற்றும் நமது ஆழமான வேரூன்றிய மரபுகளின் கொண்டாட்டமாகும். இது பாரம்பரியப் பட்டியலில் இணைத்தது இந்திய கலாச்சாரத்தின் அழகை உலகுக்குக் காட்டுகிறது. கர்பா நடனத்திற்கு உலக அங்கீகாரம் கிடைத்தது, வருங்காலத் தலைமுறையினருக்கு நமது பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் உணர்த்தப்படுகிறது. கர்பா நடனம் உலகளாவிய அங்கீகார பெற்றதற்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.