2024 பிப்ரவரி 1-ம் தேதி சமர்ப்பிக்கப்படும் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் எவ்வித புதிய அறிவிப்பும் இருக்காது. மே மாதம் நடைபெறும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 1-ம் தேதி, நாடாளுமன்றத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் சமர்பிப்பதும், விவாதங்கள் மற்றும் அவையின் ஏற்புக்குப் பிறகு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதும் வழக்கம். அந்த வகையில், 2024 பிப்ரவரி மாதம் 1-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கிறார்.
இந்த நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள இடைக்கால நிதிநிலை அறிக்கையில் என்ன இருக்கும் என்பது குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்திருக்கிறார். டெல்லியில் நடந்த சி.ஐ.ஐ. சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்ட நிர்மலா சீதாராமன் கூறுகையில், “2024-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
ஆகவே, பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படும் இடைக்கால நிதிநிலை அறிக்கை புதிய வரிவிதிப்பின்றி அறிவிக்கப்படும். இதில் அடுத்த ஆண்டு அமையவிருக்கும் அரசு எதிர்கொள்ளவிருக்கும் செலவினங்கள் மட்டுமே பட்டியலிடப்படும்.
2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலை நாடு எதிர்நோக்கி இருக்கிறது. ஆகவே, 2024-25 நிதிநிலை அறிக்கையில் வேறு எந்தவித புதிய அறிவிப்பும் வெளியாகாது. புதிய அரசாங்கம் வந்து ஜூலை 2024-ல் அடுத்த முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்” என்று கூறினார்.
கணக்கு வாக்கெடுப்பு என்று அறியப்படும் இடைக்கால பட்ஜெட், பொதுத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை, தற்போதைய அரசாங்கம் செலவினங்களை மேற்கொள்ள அனுமதிக்கும். ஆகவே, இந்த நிதிநிலை அறிக்கையில் புதிய வரி விதிப்புகள், செலவுத் திட்டங்கள் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.