ஆயுதப்படை கொடி நாள் நிதிக்கு முழு மனதுடன் நன்கொடை வழங்குமாறும், தேசத்திற்காக போரின்போது அல்லது ராணுவ நடவடிக்கைகளில் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் மனைவியர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நலனை உறுதி செய்வதற்கான அரசு முயற்சியின் ஒரு பகுதியாக இருக்குமாறும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டிசம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்படும் கொடிநாள் குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பல நலத்திட்டங்கள் மூலம் முன்னாள் படைவீரர்கள், போரில் கணவரை இழந்த பெண்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் பராமரிப்பு, உதவி, மறுவாழ்வு மற்றும் சிகிச்சை குறித்து பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குப் பங்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் தார்மீக பொறுப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கு நம் அனைவரிடமிருந்தும் உரிய அங்கீகாரம் கிடைப்பதை உறுதி செய்வது நமது கூட்டுக் கடமை என்றும் அவர் கூறியுள்ளார்.
இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளின் போது, நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், உலகெங்கிலும் உள்ள அமைதி காக்கும் பணிகளில் மதிப்புமிக்க பங்களிப்பை ராணுவத்தினர் வழங்கி வருகின்றனர்.
மேலும், ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் தேசபக்தியுடன் வீரர்கள் எல்லைகளைப் பாதுகாக்கிறார்கள் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறியுள்ளார். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக பலர் உடல் ஊனமுற்றவர்களாக மாறியுள்ள நிலையில், தாய்நாட்டின் சேவையில் மிக உயர்ந்த தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.
கொடிநாள் நிதியில் தங்கள் பங்களிப்பை உறுதி செய்யுமாறும், இந்த உன்னத நோக்கத்தில் சேர மற்றவர்களை ஊக்குவிக்குமாறும் அவர் மக்களை வலியுறுத்தியுள்ளார்.
இதனையொட்டி, பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு அஜய் பட், ஆயுதப்படை வீரர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நாட்டைப் பாதுகாக்க எப்போதும் தயாராக இருக்கும் துணிச்சலான வீரர்களுக்கு நன்றி தெரிவிக்க மக்களுக்குக் கொடிநாள் ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்று அவர் கூறினார். கொடிநாள் நிதிக்கு நன்கொடை வழங்குமாறும், நலத்திட்டங்களுக்கு ஆதரவளிக்குமாறும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
அண்மையில், முன்னாள் படைவீரர்கள்/ அவர்களைச் சார்ந்தோருக்கான மருத்துவ சிகிச்சை மானியம் ரூ.30,000 லிருந்து ரூ.50,000 ஆகவும், கணவரை இழந்தோருக்கான தொழிற்பயிற்சி மானியம் ரூ.20,000-ல் இருந்து ரூ.50,000 ஆகவும், தீவிர நோய்கள் சிகிச்சைக்கான மானியம் ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ.1.50 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது. வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80 ஜி உட்பிரிவு (5) (வி)-ன் கீழ் நிதிக்கான பங்களிப்புகளுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
2022-23 நிதியாண்டில், 99,000 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சுமார் ரூ. 250 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, நாடு முழுவதும் உள்ள 36 போர் நினைவு விடுதிகளுக்கும் நிறுவன மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.