உத்திரமேரூர் ஆனைப்பள்ளம் குள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி கட்டுப்பாட்டிலுள்ள ஆனைப்பள்ளம் கிராமத்தில், பத்து ஏக்கர் பரப்பளவிலான மன்னர் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட மிகப் குளம் அமைந்துள்ளது.
2023- ஆம் ஆண்டுக்கான 15 – வது நிதிக்குழு மானியத்தில் ரூபாய் 20 லட்சம் செலவில், குளத்தின் கரைகளை பலப்படுத்தி மழை நீர் வடிகால்வாயுடன் கூடிய தூர்வாரும் பணிகள் உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகத்தால் நடப்பாண்டு டெண்டர் விடப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளன.
குள ஆக்கிரமிப்பு தொடர்பாக கடந்தாண்டு அதே கிராமத்தை சேர்ந்த இரு தரப்பினரிடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டது. கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு குளத்தினுள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்கு குவிக்கப்பட்டிருந்த கட்டுமான பொருட்களை அகற்றிடவும், குளத்தினுள் எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டார்.
இந்நிலையில் குளம் சீரமைப்பு பணியின் போது குளத்தினுள் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட நீர் பிடிப்பு பகுதிகளில் கட்டுமான பொருட்களை அகற்றப்படாமல், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை குளத்தினுள் இணைக்காமல் தீவு போல காட்சியளிக்கிறது.
இதனிடையே, குளத்தின் கரைகளையும்,அதனையொட்டியுள்ள அரசுக்கு சொந்தமான நீர்-நிலை பொதுவழிக்கான அரசு புறம்போக்கு நிலங்களையும், அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் ஜேசிபி- இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
இது குறித்த அப்பகுதி மக்கள் பலமுறை உத்திரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சியின் செயல் அலுவலர் லதா, உத்தரமேரூர் வட்டாட்சியர் ஞானவேல், ஆகியோரிடம் புகாரளித்தனர்.
ஆனால் இதுவரை குளத்தின் சீரமைப்பு பணிகளையோ நீர்-நிலை ஆக்கிரமிப்பு குறித்த, எவ்விதமான விசாரணையும் செய்யாமல், துறை சார்ந்த அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே ஆனைப்பள்ளம் குளத்தினை மாவட்ட பேரூராட்சிகளின் துணை இயக்குநரும், நீர்வளத் துறையினரும், நேரில் ஆய்வு செய்து குளத்தின், நீர் பிடிப்பு பகுதிகளையும், குளத்தின் கரைகளை ஒட்டிய அரசுக்கு சொந்தமான பொது வழிப்பாதைகளில் உள்ள, நீர்-நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முறையான நான்கு புறங்களிலும் அளவீடு செய்து மன்னராட்சி காலத்தில் வெட்டப்பட்ட குளத்தினை பழமை மாறாமல்- மீட்டெடுத்து கிராம மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.