பப்புவா நியூ கினியாவில் எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகளை சமாளிக்க உதவும் வகையில், பப்புவா நியூ கினியாவிற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா அறிவித்துள்ளது.
கடந்த 20-ஆம் தேதி பப்புவா நியூ கினியாவில் உள்ள உலாவுன் மலையில் மிகப் பெரிய எரிலை வெடித்தது. இதனால், அப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து, அப்பகுதியில் வசித்து வந்த 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இயற்கை பேரிடர்களால் ஏற்பட்ட சேதம் மற்றும் அழிவுகளுக்காக பப்புவா நியூ கினியா அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இந்தியா ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளது. மேலும், எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகளை சமாளிக்க உதவும் வகையில், பப்புவா நியூ கினியாவிற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியா – பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் கீழ் நெருங்கிய நண்பர் மற்றும் மேம்பாட்டு கூட்டாளராக இருக்கும் பப்புவா நியூ கினியாவுக்கு இந்தியா நிவாரண உதவிகளை வழங்குகிறது.
இரு நாடுகளின் நட்பு மற்றும் மக்கள் இடையேயான ஒற்றுமை ஆகியவற்றின் அடையாளமாக பப்புவா நியூகினியாவின் எரிமலை வெடிப்பு பாதிப்புகளை சரி செய்ய உதவும் வகையில், இந்தியா உடனடி நிவாரண தொகையாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 8 கோடியே 33 இலட்சம் ரூபாய்) வழங்குகிறது என்று கூறப்பட்டுள்ளது.