பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
கராச்சியில் ஆர்ஷி வணிக மற்றும் குடியிருப்பு கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தின் தரைதளத்தில் 250 கடைகள் உள்ளன. மேல் உள்ள நான்கு தளத்தில் 450 குடியிருப்புகள் உள்ளன.
இந்த நிலையில், நேற்று தரைதளத்தில் இருந்த ஒரு கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென பற்றி மற்ற கடைகளுக்கும் பரவியது.
இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தொடர்ந்து மீட்புக் குழுவினர், கட்டடத்தில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். மீட்புப் பணிகள் நேற்று இரவுடன் நிறைவடைந்தது.
தீயினால் பல இலட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும், இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் எரிந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தால் அடுக்குமாடி கட்டடத்தின் தரைதளம் கடுமையாக சேதமடைந்துள்ளது. கட்டடம் வலுவிழந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆய்வுக்குப் பின், கட்டடம் பயன்பாட்டுக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.