இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட, 21 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
மிக்ஜாம் புயல் கரையைக் கடந்து, காற்றின் வேகம் குறைந்த பிறகு நேற்று தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இந்த நிலையில், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த, இராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 21 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்த 21 மீனவர்களில் 13 பேர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள், 8 மீனவர்கள் இராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட 21 மீனவர்களும், இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, கடற்பரப்பில் எங்கள் தமிழக மீனவர்களுக்கு வலுவான தூணாக விளங்கும் தங்களின் திறமையான அலுவலகத்திற்கு, தமிழக பாஜக சார்பாகவும், தமிழக மீனவர்கள் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
டிசம்பர் 6-ஆம் தேதி இராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 21 தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் கைது செய்ததை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
கைது செய்யப்பட்டவர்களை விரைவில் விடுவித்து, தாயகம் அழைத்து வர நமது வெளிவிவகார அமைச்சகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கக்கோருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.