உலகின் முன்னணி மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், சீனாவை நம்பியிருப்பதைக் குறைக்க, அதன் சாதனங்களுக்கான பேட்டரிகளை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் தனது பிரபலமான ஐபோன்கள், ஐபேட் உட்பட பல்வேறு தயாரிப்புகளை சீனாவில் உள்ள ஒப்பந்ததாரர்கள் மூலம் தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வந்தது.
கொரோனா மற்றும் அமெரிக்கா – சீனா வர்த்தக போர் போன்ற காரணங்களால் ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளை வேறு நாடுகளுக்கு மாற்றத் தொடங்கியது.
இந்தியாவில் தங்களது தயாரிப்புகளைத் தயார் செய்வதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி தனது சப்ளையர்களிடம் வலியுறுத்தியது. இதனையடுத்து, பல ஆப்பிள் சப்ளையர்கள் இந்தியாவில் தங்களது ஆலைகளை தொடங்கி வருகின்றன.
ஜப்பானிய மின்னணு பாகங்கள் தயாரிப்பாளரான, டிடிகே கார்ப்பரேஷன் நிறுவனம், இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களுக்கான லித்தியம் அயன் பேட்டரி செல்களை உற்பத்தி செய்யத் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தார்.
இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16-க்கான பேட்டரிகளை இந்திய தொழிற்சாலைகளில் இருந்து பெறுவதற்கான அதன் விருப்பத்தை சப்ளையர்களிடம் கூறியுள்ளது. ஐபோன் 16-க்கான பேட்டரி விநியோகம் சீராக இருந்தால், இந்தியாவில் அதிகளவில் ஐபோன் பேட்டரிகளைத் தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் பரிசீலிக்கும் என்று கூறப்படுகிறது.