இன்ஃபினிட்டி ஃபோரம் எனப்படும் சர்வதேச நிதிச் சேவை மையங்களின் ஆணைய அமைப்பு 2.0 நிகழ்வில் நாளை பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
நிதித் தொழில்நுட்பத்தில் உலகளாவிய சிந்தனை தலைமைத்துவ தளமான சர்வதேச நிதிச் சேவை மையங்களின் ஆணைய அமைப்பு (இன்ஃபினிட்டி ஃபோரம்) 2.0 நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10:30 மணிக்குக் காணொலி காட்சி மூலம் உரையாற்றவுள்ளார்.
துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு- 2024 என்பதன் முன்னோட்ட நிகழ்வாக சர்வதேச நிதி சேவை மையங்கள் (ஐ.எஃப்.எஸ்.சி) ஆணையம் மற்றும் குஜராத் சர்வதேச நிதித்தொழில் நுட்ப நகரம் ( கிஃப்ட் சிட்டி) ஆகியவை இணைந்து இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
முற்போக்கான யோசனைகள், முக்கிய பிரச்சனைகள், புதுமையான தொழில்நுட்பங்கள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டு தீர்வுகளை ஏற்படுத்தும் ஒரு தளத்தை இந்தக் கூட்டம் வழங்குகிறது.
இன்ஃபினிட்டி அமைப்பின் 2 வது கூட்டத்தின் கருப்பொருள் ‘கிஃப்ட்-ஐ.எஃப்.எஸ்.சி: புதிய உலகளாவிய நிதி சேவைகளுக்கான முக்கிய மையம்’ என்பதாகும்.
ஒவ்வொரு தலைப்பும் ஒரு மூத்த தொழில்துறை தலைவரின் பேச்சு, இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள நிதித் துறையைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் குழுவின் விவாதம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இது நடைமுறை நுண்ணறிவுகள் மற்றும் செயல்படுத்தக்கூடிய தீர்வுகளை வழங்கும்.
இந்த நிகழ்வில் 300-க்கும் அதிகமான தலைமை அனுபவ அதிகாரி (சிஎக்ஸ்ஓ)களும் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இணையதளம் மூலம் பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்.