வனாடு தீவில் நேற்று மாலை, 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் வனாடு தீவு அமைந்துள்ளது. எரிமலைகளைக் கொண்டுள்ள இத்தீவுகள், ஆஸ்திரேலியாவுக்கு சுமார் ஆயிரத்து 750 கிலோ மீட்டர் கிழக்கேயும், நியூ கலிடோனியாவுக்கு 500 கிலோ மீட்டர் வட-கிழக்கேயும் அமைந்துள்ளது.
இந்த நிலையில், வனாடு தீவின் தெற்கு பகுதியில், நேற்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானதாக அமெரிக்கபுவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலில் இருந்து சுமார் 48 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் உணரப்பட்டது. இசங்கல் நகரத்திலிருந்து 123 கிலோ மீட்டர் தெற்கிலும், தலைநகர் போர்ட் விலாவிலிருந்து 338 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் எதிரொலியால், வனாடு மற்றும் நியூ கலிடோனியா கடற்கரைகளில் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர்களுக்குள் சுனாமி உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.