நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்ற புகாரில் மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா. இவர், நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்ப தொழிலதிபர் தர்ஷன் ஹிராந்தானியிடமிருந்து பெரும் தொகையை லஞ்சமாக பெற்றதாகவும், இதற்காக அவரது நாடாளுமன்ற இணையக் கணக்கு பல முறை தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பான ஆதாரங்களை பாஜக எம்பி நிஷிகாந்த் துபேயிடம், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் வழங்கினார். இதுதொடர்பாக விசாரணை நடத்த மக்களவை சபாநாயகர் நெறிமுறைக்குழுவுக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து மஹுவா மொய்த்ராவிடம் மக்களவை நெறிமுறைக்குழு விசாரணை நடத்தியது. ஆனால் அவர் விசாரணையின் போது பாதியிலேயே வெளியேறினார்.
இந்த நிலையில் இன்று மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியபோது நெறிமுறைக் குழுவின் தலைவர் வினோத் குமார் சோன்கர், மஹுவா மொய்த்ரா பதவிநீக்கம் தொடர்பான பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதையடுத்து மஹுவா மொய்த்ராவை பதவிநீக்கம் செய்ய மக்களவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது