மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களின் முதல்வர்களை தேர்வு செய்வதற்காக பா.ஜ.க. தரப்பில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உட்பட 5 மாநில சட்டமன்றங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடந்தது. இதன் முடிவுகள் கடந்த 3-ம் தேதி வெளியிடப்பட்டன. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.
ஆனால், முதல்வர்கள் யார் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, தேர்தலின்போது முதல்வர் வேட்பாளர்களை அறிவிப்பதில்லை. வெற்றிபெற்ற பிறகுதான் முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும். அதன்படி, தற்போதும் 3 முதல்வர்கள் யார் என்பதில் குழப்பம் நிலவி வருகிறது.
ராஜஸ்தானில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானுக்கே மீண்டும் வாய்ப்பு என்றும், சத்தீஸ்கரில் முன்னாள் முதல்வர் ராமன் சிங்குக்குத்தான் வாய்ப்பு என்றும் பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன.
அதேசமயம், 3 மாநிலங்களிலும் புதுமுக முதல்வர்களை அறிவிக்க பா.ஜ.க. திட்டமிட்டிருப்பதாகவும், இதனால் அந்தந்த மாநில பா.ஜ.க. தலைவர்கள் சிலரது பெயரை பரிந்துரை செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில்தான், 3 மாநில முதல்வர்களை தேர்வு செய்வதற்காக பா.ஜ.க. தரப்பில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இக்குழுவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மனோகர் லால் கட்டார், அர்ஜூன் முண்டா ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.
இக்குழுவினர் அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று முதல்வர் வேட்பாளர்களை தேர்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், ராஜஸ்தான் மாநில முதல்வரை தேர்வு செய்வதற்காக ராஜ்நாத் சிங் மற்றும் சரோஜ் பாண்டே, வினோத் தாவ்டே ஆகியோர் செல்கிறார்கள்.
அதேபோல, சத்தீஸ்கர் மாநிலத்துக்கு அர்ஜூன் முண்டாவுடன் மத்திய அணைச்சர் சர்பானந்தா சோனோவால், துஷ்வந்த் குமார் ஆகியோர் செல்கிறார்கள். மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு மனோகர் லால் கட்டாருடன் சில முக்கிய நிர்வாகிகள் செல்கிறார்கள். ஆகவே, 3 மாநிலங்களுக்கான முதல்வர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.