நான் 3-வது முறையாக பிரதமர் பதவியில் இருக்கும்போது, இந்தியா நிச்சயம் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் 3-வது இடத்தில் இருக்கும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் வன ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்டில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு இன்றும் நாளையும் நடக்கிறது. இம்மாநாட்டை இன்று தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேசுகையில், “21-ம் நூற்றாண்டில் 3-வது தசாப்தம் உத்தரகண்டுக்குச் சொந்தமானது என்ற எனது கணிப்பு நனவாகும்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள், கட்டுப்பாட்டாளர்களிடம் நம்முடைய பொருளாதாரம் குறித்த நம்பிக்கை வளர்ந்திருக்கிறது. உத்தரகண்ட் தெய்வீகத்தையும், வளர்ச்சியையும் இணைக்கிறது. தெய்வீக பூமியான உத்தரகண்ட் நிச்சயம் உங்களுக்கான ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கும்.
வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் என்ற மந்திரத்துடன் இந்தியா முன்னேறி வருவதுற்கு இன்று உத்தரகாண்ட் சிறந்த எடுத்துக்காட்டு. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா சிறப்பான வளர்ச்சிப் பெற்றிருக்கிறது. ஒரு காலத்தில் மக்களின் உரிமை பறிக்கப்பட்டது. ஆனால், தற்போது அரசின் முயற்சிகள் மக்களை சென்றடைந்திருக்கின்றன.
கடந்த 5 ஆண்டுகளில் 13 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டிருக்கிறார்கள். இவை பொருளாதாரத்திற்கு ஊக்கம் அளித்திருக்கிறது. தற்போது நாட்டில் நுகர்வு சார்ந்த பொருளாதாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நான் 3-வது முறையாக பிரதமர் பதவியில் இருக்கும்போது, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா நிச்சயம் 3-வது இடத்தில் இருக்கும்” என்றார்.