மாநிலங்களவையில் இன்று கவாச் 1465 வழித்தட கி.மீ மற்றும் 139 ரயில் என்ஜின்களில் நிறுவப்பட்டுள்ளது என இரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
கவாச் என்பது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு (ஏடிபி) அமைப்பாகும். இது உயர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மிக உயர்ந்த பாதுகாப்பு சான்றிதழைப் பெற்றுள்ளது.
தானியங்கி பிரேக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட வேக வரம்பிற்குள் ரயிலை இயக்க லோகோ பைலட்டுக்கு கவாச் உதவுகிறது, மேலும் மோசமான வானிலையின் போது ரயிலைப் பாதுகாப்பாக இயக்கவும் இது உதவுகிறது.
பயணிகள் ரயில்களில் முதல் கள சோதனைகள் பிப்ரவரி 2016-ல் தொடங்கப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட அனுபவத்தின் அடிப்படையிலும், 3-வது தரப்பினரால் சுதந்திரமான பாதுகாப்பு மதிப்பீட்டின் அடிப்படையிலும், 2018-19 ஆம் ஆண்டில் கவாச் வழங்க மூன்று நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து கவாச் ஜூலை 2020-ல் தேசிய ஏடிபி அமைப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. கவாச் இதுவரை தென் மத்திய ரயில்வேயில் 1465 வழித்தட கி.மீ மற்றும் 139 என்ஜின்களில் பொருத்தப்பட்டுள்ளது.
தற்போது தில்லி – மும்பை மற்றும் தில்லி – ஹவுரா வழித்தடங்களுக்கு (சுமார் 3000 வழித்தட கி.மீ) கவாச் டெண்டர்கள் வழங்கப்பட்டு, இந்த வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் 6000 கி.மீ.க்கு சர்வே, விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் விரிவான மதிப்பீடு தயாரித்தல் உள்ளிட்ட ஆயத்தப் பணிகளையும் இந்திய ரயில்வே மேற்கொண்டுள்ளது. கவாச் திட்டத்தை செயல்படுத்துவதை அதிகரிக்கவும், திறனை அதிகரிக்கவும் மேலும் ஓ.இ.எம்.களை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாதுகாப்புக்கு இந்திய ரயில்வே முன்னுரிமை அளிக்கிறது. பாதுகாப்பின் அளவை மேம்படுத்துவதற்காக இந்திய ரயில்வே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.