சென்னை எண்ணூரில் மழை நீரில் எண்ணெய் கழிவுகள் கலந்தது தொடர்பாக, தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
பெரும் ழையைக் காரணம் காட்டி, சென்னை எண்ணூர் கழிமுகத்தில் நச்சுத்தன்மை வாய்ந்த தொழிற்சாலை எண்ணெய் கழிவுகள் சத்தமின்றித் திறந்துவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை மழை வெள்ளத்தின் போதும் கழிவுகளை மழை நீரில் திறந்து விடுவதைச் சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இதைக் கண்டும் காணாமல் இருக்க மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு வெட்டவேண்டியதை வெட்டிவிட்டு, சத்தமில்லாமல் ரசாயன கழிவுகளை வெளியேற்றியுள்ளனர்.
இந்த பிரச்சனை சென்னை எண்ணூருக்கு புதிது. ஆனால், கரூர் கடலூர், தூத்துக்குடி, வேலூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற மற்ற தொழிற்சாலை பகுதிகளில் இது சாதாரணம். காரணம், இது அடிக்கடி நடப்பது வழக்கம்.
ஏற்கனவே, வெள்ள நீர் வடியாமல் வீட்டிற்குள் புகுந்து அவதிபட்டுக் கொண்டிருக்கும் சென்னை எண்ணூர் பகுதி மக்களின் வீட்டிற்குள் தற்போது எண்ணெய் கழிவுகள் புகுந்து இருப்பது மேலும் பாதிப்பை அதிகரித்துள்ளது. திமுக அரசு எந்த அளவுக்குச் செயல் இழந்துள்ளது என்பதை இந்த சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
இது தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறி இருக்கும் அபாயகரமான நச்சு எண்ணெய் என்பதால், மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அரசு விரைந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும், இது போன்ற அராஜகத்தில் ஈடுபட்ட தொழிற்சாலைகளை உரிமையாளர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
அதேவேளையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தொழிற்சாலைகளின் செலவில், பாதிக்கப்பட்ட இடங்களை முழுமையாகச் சுத்தம் செய்து தர வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டை அந்த நிறுவனமோ அல்லது தமிழக அரசோ உடனே வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில், போராட்டம் தவிர்க்க முடியாது என்றும் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில், தற்போது, தாமாக முன்வந்து விசாரிக்கிறது தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம். இது தொடர்பான விசாரணை நாளை காலை பட்டியலிடப்பட்டுள்ளது.