ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.பி.க்குச் சொந்தமான, ஒடிஸா மாநிலத்தில் உள்ள மதுபான ஆலையில் இருந்து 200 கோடி ரூபாய் வரையிலான கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மக்களிடம் இருந்து திருடப்பட்ட பணம் மீண்டும் மக்களிடமே வந்து சேரும் என்று கூறியிருக்கிறார்.
ஒடிஸா மாநிலத்தில் “பவுத் டிஸ்டிலெரி பிரைவேட் லிமிடெட்” என்கிற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் கடந்த 6-ம் தேதி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், இந்நிறுவனத்திற்குச் சொந்தமாக பாலாங்கிர், சம்பல்பூர், சுந்தர்கார்க் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பொகாரோ, ராஞ்சி மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் கோல்கட்டா நகரங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இச்சோதனையில், பாலாங்கிர் மாவட்டத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில் இருந்த பீரோக்களில் கட்டுக் கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அங்கு 36-க்கும் மேற்பட்ட பணம் எண்ணும் இயந்திரங்களை வைத்து பணத்தை எண்ணி வருகின்றனர். இதில் இதுவரை 200 கோடி ரூபாய் இருந்தது தெரியவந்திருக்கிறது.
இதேபோல, மற்ற இடங்களிலும் ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதனால், இந்நிறுவனம் 250 கோடி ரூபாய் வரை பதுக்கி வைத்திருக்கலாம் என்பது தெரியவந்திருக்கிறது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிறுவனம் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.பி. தீரஜ் பாண்டே சாஹுவிற்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, இச்செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, “இதை நாட்டு மக்கள் பார்க்க வேண்டும். நேர்மையின் முகமாக இருக்கும் இதுபோன்ற தலைவர்கள் பேசுவதைக் கேட்க வேண்டும். மக்களிடம் இருந்து திருடப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் மீண்டும் மக்களிடமே ஒப்படைக்கப்படும். இது மோடியின் வாக்குறுதி” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மதுபான விற்பனையாளர்கள், முகவர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்து பெரியளவிலான பணப் பரிமாற்றும் நடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
देशवासी इन नोटों के ढेर को देखें और फिर इनके नेताओं के ईमानदारी के 'भाषणों' को सुनें… 😂😂😂
जनता से जो लूटा है, उसकी पाई-पाई लौटानी पड़ेगी, यह मोदी की गारंटी है।
❌❌❌💵 💵 💵❌❌❌ pic.twitter.com/O2pEA4QTOj
— Narendra Modi (@narendramodi) December 8, 2023