கலை என்பது இயற்கை சார்ந்தது. காலநிலைக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆதரவானது. ஆகவே, கலை பண்பாட்டை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
டெல்லி செங்கோட்டையில் முதலாவது “இந்திய கலை, கட்டடக்கலை மற்றும் வடிவமைப்பு பைனாலே 2023” நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கலை, கட்டடக்கலை மற்றும் வடிவமைப்பு பைனாலே 2023 நினைவு தபால் தலைகளை வெளியிட்டார்.
மேலும், ‘ஆத்மநிர்பர் பாரத்’ மையத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, 7 ஆராய்ச்சி கட்டுரைகளையும் வெளியிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “நான் இங்குள்ள அரங்குகளை பார்த்தேன். இந்த அரங்குகளில் வண்ணங்கள், படைப்பாற்றல், கலாச்சாரம் மற்றும் சமூக தொடர்புகள் உள்ளன.
எங்கள் இலக்கை அடைவதற்காக, ‘ஆத்மநிர்பர் பாரத்’ வடிவமைப்பு மையம் திறக்கப்பட்டது. இந்த மையம் நாட்டிலுள்ள தனித்துவமான மற்றும் அரிய கைவினைப் பொருட்களுக்கு மேடையை வழங்கும். கலை எந்த வடிவத்தில் இருந்தாலும், அது எப்போதும் இயற்கையுடன் நெருக்கமாக பிறக்கிறது.
கலை என்பது இயற்கைக்கு சார்பானது. மேலும், சுற்றுச்சூழலுக்கும், காலநிலைக்கும் ஆதரவானது. ஆகவே, இன்றைய உலகில் கலை பண்பாட்டை நாம் ஊக்குவிக்க வேண்டும். சர்வதேச அருங்காட்சியக் கண்காட்சி, நூலகங்களின் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் ஊக்குவிப்போம்” என்றார்.