மெஃப்டால் வலி நிவாரணி மாத்திரைகளால் மோசமான எதிர்விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அந்த மாத்திரைகளை பொதுமக்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாதவிடாய் வலி, முடக்கு வாதம் உள்ளிட்ட பல்வேறு வலிகளுக்கு மெஃப்டால் வலி நிவாரணி மாத்திரை பயன்பாடு வழக்கத்தில் உள்ளது. இந்த மாத்திரை விரைவாகவும், நீண்ட நேரமும் நிவாரணம் அளிப்பதால், பலரும் மெஃப்டால் மாத்திரையைக் கடைகளில் நேரடியாக விரும்பி வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில், இந்திய மருந்தியல் ஆணையம், மெஃப்டால் வலி நிவாரணி மாத்திரையைப் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ள இந்த மருந்துப் பொருட்களில் உள்ள எதிர்வினைகள் மற்றும் பாதகங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் முதற்கட்ட ஆய்வில் மெஃப்டால் மருந்து இரத்தத்தில் அளவுக்கு அதிகமான வெள்ளை அணுக்களை உருவாக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மருத்துவர்கள் அறிவுறுத்தல் இல்லாமல், வலி மாத்திரைகளைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.