நாட்டில் மின்னேற்றி நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 7432 மின்சார வாகன மின்னேற்றி நிலையங்களை அமைக்க 3 எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு கனரக தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என மாநிலங்களவையில் மத்திய கனரக தொழில்துறை இணையமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மின்சார / ஹைபிரிட் வாகனங்களை ஊக்குவிப்பதற்காக கனரக தொழில்கள் அமைச்சகம் 2015-ம் ஆண்டில் இந்தியாவில் மின்சார வாகனங்களின் விரைவான முன்னெடுப்பு மற்றும் உற்பத்தி (ஃபேம் இந்தியா) என்ற திட்டத்தை உருவாக்கியது. இந்த திட்டத்தின் முதல் கட்டம் 2019 மார்ச் 31 வரை ரூ. 895 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் முதல்கட்டமாக சுமார் 2.8 இலட்சம் மின்சார வாகனங்களுக்கு ரூ.359 கோடி அளவிற்கு சலுகைகள் வழங்கப்பட்டன. மேலும், இத்திட்டத்தின் முதல் கட்டமாக 425 மின்சார மற்றும் ஹைபிரிட் பேருந்துகள் நாட்டின் பல்வேறு நகரங்களில் சுமார் ரூ.280 கோடியில் அரசின் ஊக்கத்தொகையுடன் இயக்கப்படுகின்றன.
ஃபேம்-இந்தியா திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் சுமார் 520 மின்னேற்ற நிலையங்கள் / உள்கட்டமைப்புகளுக்கு ரூ.43 கோடிக்கு கனரக தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஃபேம் இந்தியா திட்டத்தின் முதல் கட்டத்தின் போது பெறப்பட்ட முடிவுகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையிலும், தொழில் மற்றும் தொழில் சங்கங்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்த பின்னர், ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை 2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.10,000 கோடி மொத்த வரவுசெலவுத் திட்ட ஆதரவுடன் அரசு அறிவித்தது.
இந்த இரண்டாவது கட்டம் முக்கியமாக பொது மற்றும் பகிரப்பட்ட போக்குவரத்தை மின்மயமாக்குவதை ஆதரிப்பதில் கவனம் செலுத்துகிறது, மேலும் 7090 மின்சார பேருந்துகள், 5 லட்சம் மூன்று சக்கர மின்சார வாகனங்கள், 55000 மின்சார கார்கள், 10 லட்சம் மின்சார இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றிற்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 11,61,350 மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு ரூ.5248.00 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு நகரங்கள் / அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் / மாநில அரசு நிறுவனங்களுக்கு 6862 மின்சார பேருந்துகளை இயக்குவதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
29.11.2023 நிலவரப்படி 6862 மின்சார பேருந்துகளில் 3487 மின்சார பேருந்துகள் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
7,432 மின்சார வாகன பொது மின்னேற்றி நிலையங்களை நிறுவுவதற்காக, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் மூன்று எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ 800 கோடி மூலதன மானியமாக கனரக தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் 148 மின்னேற்றி நிலையங்கள் பிற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஃபேம்- இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், மின்சார வாகன உற்பத்தியாளர்கள் / நிறுவனங்களுக்கு எந்த ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை. இந்த ஊக்கத்தொகை / சலுகை நுகர்வோருக்கு ஹைபிரிட் மற்றும் மின்சார வாகனங்களின் முன்கூட்டியே குறைக்கப்பட்ட கொள்முதல் விலை வடிவத்தில் வழங்கப்படுகிறது.
ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 3 எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு 7432 மின்சார வாகன மின்னேற்றி நிலையங்களுக்கும், அனைத்து மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்களில் உள்ள பிற நிறுவனங்களுக்கு 148 மின்சார வாகன நிலையங்களுக்கும் கனரக தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.