தமிழில் வெளியான ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம்வந்த மதுரை மோகன் உடல்நலக் குறைவால் காலமானார்.
இவர் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
மதுரை மோகன் தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேல் பல படங்களில் சிறிய வேடங்களிலும்,குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தவர். இவருக்கு அடையாளமே அவரின் கம்பீரமான மீசை தான். இந்த மீசை தான் பல படங்களில் அவருக்கு வாய்ப்புகளைப் பெற்றுத்தந்தது.
விஷ்ணு விஷால், காளி வெங்கட் நடித்த முண்டாசுப்பட்டி படத்தில் மதுரை மோகனுக்குச் சிறப்பான கதாபாத்திரம் கிடைத்தது. அதனைத் தனது நடிப்புத் திறமையால் நேர்த்தியாக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். மதுரை மோகன் உயிரிழந்ததை நடிகர் காளி வெங்கட் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதில்,”ஐயா நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும். ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை “முண்டாசுப்பட்டி” படத்தின் மூலம் வாய்ப்பளித்தவர் இயக்குநர் ராம்குமார் என தெரிவித்துள்ளார்.