அரபிக்கடலில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறி, கடந்த 5-ஆம் தேதி தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ள பாபட்லாவிற்கு அருகே கரையைக் கடந்தது.
இதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. மேலும், ஆந்திர மாநிலத்தின் பல பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தென்கிழக்கு அரபிக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய மாலத்தீவு பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.