சென்னை ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கிண்டி ஆளுநா் மாளிகை முன் கடந்த அக்டோபா் மாதம் 25-ஆம் தேதி அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதுகுறித்த புகாரின் பேரில் கிண்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக கருக்கா வினோத் என்பவனை போலீசார் கைது செய்தனர்.
ஏற்கனவே பெட்ரோல் குண்டு வீசியதாக பல வழக்குகள் வினோத் மீது நிலுவையில் இருந்தது தெரியவந்தது. பின்னர் வினோத் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. இதுதொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இதனையடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.