நீலகிரி மாவட்டத்திற்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக, ஊட்டி மலை இரயில் சேவை மேலும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் மேட்டுப்பாளையம் – குன்னூர் மலைப்பாதையில் பெய்த கனமழையால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும், இரயில் தண்டவாளத்தின் மீது பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்தன. இதனால் கடந்த மாதம், 22-ஆம் தேதியிலிருந்து இம்மாதம், 7-ஆம் தேதி வரை, மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே மலை இரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.
சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், நேற்று மீண்டும் இரயில் சேவை தொடங்கப்பட்ட நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, மலை இரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்றும், நாளையும் மலை இரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று மலை இரயிலில் செல்வதற்கு ஆர்வத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.