வட்டிச் சமன்படுத்தும் திட்டத்தை 2024 ஜூன் 30-ம் தேதிவரை நீட்டிப்பதற்காக 2,500 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
இதுகுறித்து வணிகம் மற்றும் வர்த்தக தொழில் அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “ஏற்றுமதிக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில் ஏற்றுமதியாளா்களுக்குக் கடனளிக்கும் வட்டி சமநிலை திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்படட்டது.
இத்திட்டத்தில் குறிப்பிட்ட 410 தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும் உற்பத்தியாளா்கள் மற்றும் வணிக ஏற்றுமதியாளா்களுக்கு 2 சதவீத மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. அதேபோல, எம்.எஸ்.எம்.இ. ஏற்றுமதியாளா்களுக்கு 3 சதவீத மானியத்தில் கடன் அளிக்கப்படுகிறது.
ஆரம்பத்தில், 2020 மாா்ச் 31-ம் தேதி வரை 5 ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. பின்னர், கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடா்ந்து நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், இத்திட்டத்தை 2024 ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்க, 2,500 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன் மூலம் மேற்கண்ட 410 துறைகளைச் சோ்ந்த மற்றும் எம்.எஸ்.எம்.இ. தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளா்கள் பயன்பெறுவா்.
இத்திட்டம் DGFT (Digorate General of Foreign Trade) மற்றும் RBI ஆல் ஆலோசனை அமைப்பு மூலம் கூட்டாக கண்காணிக்கப்படுகிறது. ஐ.ஐ.எம். காஷிபூர் நடத்திய ஆய்வின்படி, வட்டி சமன்படுத்தும் திட்டத்தின் விளைவு நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு நன்மை பயக்கும். மேலும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு MSME துறை முக்கியமானது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.